பொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா? மகிந்த அணியின் முக்கியஸ்தர்

முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார். எனவே சூடு சுரணையுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வாழைச்சேனையில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொட்டு அம்மானுக்கு சம்பளம் வழங்கி வைத்திருந்தது போன்று சஹ்ரானுக்கும் சம்பளம் கொடுத்து வைத்திருந்தோம் என்று மகிந்த அணியைச் சேர்ந்த கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். எந்த தேவைக்காக சஹ்ரானை எடுத்து வைத்திருந்தீர்கள்.

வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாக குண்டு வெடிக்கப்பட வேண்டும். அதன் கொலைக் களத்திற்கு போனவர் தான் சஹ்ரானே தவிர அவரொரு பயங்கரவாதியாக நான் கண்டு கொள்ளவில்லை. அரச புலனாய்வின் கொந்தராத்து காரனாக இந்த செயலை செய்துள்ளார்.

இந்த நாட்டில் பதினோராயிரம் பேர் இராணுவ புலனாய்வில் உள்ளார்கள். 119 தடவை சஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அவரை பிடிக்கவில்லை.

இங்கு ஏதும் பிரச்சினை என்றால் எத்தனை தடவை பொலிஸ் மற்றும் புலனாய்வினர் தேடி வருவார்கள். ஆனால் சஹ்ரானை தேடவில்லை. ஏனெனில் சஹ்ரான் அவர்களுடைய காவலில் இருந்தமையால் தேடி பிடிக்க முடியாமல் போனது. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தினார்கள். இது தேர்தலுக்காக அவர்கள் அமைத்த வியூகம்.

தேர்தலில் வெல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்களை தள்ளி வைப்பதற்கான தந்திரோபாயம் வேண்டும். தமிழ், கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தினை பிரிப்பதற்காக திட்டமிட்டுக் கொண்ட சதி. அதைத்தான் மகேஸ் சேனநாயக்க சொல்கின்றார்.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் என்றவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை. ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த நிகழ்வு அதுதான். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்தமை அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய தலையிடி. ஒரு குடும்ப ஆட்சியில் இருந்து தான் வர வேண்டும் என்கின்ற நிலவரம் நாட்டுக்கு எற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *