சஜித்தின் கரங்களை பலப்படுத்தியுள்ளேன்! – சந்திரிக்கா

கடந்த காலத்தில் ஊழல், மோசடிகள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தும், கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றி நாட்டை இரத்தக் களறியாக்கியும் அட்டூழியம் புரிந்த கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கும்பலைத் தோற்கடிக்கவே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நான் ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கும் சந்திரிக்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இதன்பின்னர் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சந்திரிக்கா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை. அதனால்தான் சஜித்தின் கரங்களை நான் பலப்படுத்தியுள்ளேன்.

மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வாழ வேண்டும். அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சஜித் உத்தரவாதம் வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றியடைவார். அதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு என அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *