வவுணதீவு கொலை விவகாரத்தை முறையாக விசாரிக்கவில்லை – கோட்டா குற்றச்சாட்டு

வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்டபோதே, முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் ஈஸ்டர் தாக்குதல்களை தடுத்திருக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அன்று பொலிஸில் இருந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை, நாம் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கவே பயன்படுத்தினோம். ஆனால், இந்த அரசாங்கம் இந்த பிரிவினரை அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளத்தான் பயன்படுத்தினர்.

என்னை அன்று சிறைக்குள் தள்ளவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையே பயன்படுத்தினார்கள். பயங்கரவாதத்தையே இல்லாதொழித்த என்மீதுதான் இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தினார்கள்.

வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்டபோது, என்னுடன் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், இந்த சம்பவம் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டிருக்காது என்று உறுதியாகக் கூறினார். இது அடிப்படைவாதிகளின் வேலை என்று தெரிவித்தார்.

நான், உடனே இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியப்படுத்துமாறுக் கூறியவுடன் அவரும் அதனை தெரிவித்தார். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தமிழ் இளைஞர்கள்தான் கைது செய்யப்பட்டார்கள்.

இறுதியில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்தான் அனைத்து உண்மைகளும் வெளிவந்தன. அன்றே இந்த கொலைகள் தொடர்பாக முறையான விசாரணையொன்று இடம்பெற்றிருக்குமானால், ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்க முடியும்.

விசாரணை ஆணைக்குழுக்களில் இதனைத்தான் தேடிப்பார்க்க வேண்டும். ஆனால், அரசாங்கம் இதனை இதுவரை செய்யவில்லை.

நாம் அன்று புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியிருந்தோம். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, விசேட பயிற்சிகளை வழங்கியிருந்தோம்.

இந்த கட்டமைப்பெல்லாம், முற்றாக இல்லாதொழிந்துவிட்டன. எவ்வாறாயினும், நாம் மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வந்தால் அனைத்தையும் மீண்டும் பலப்படுத்துவோம்” என மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *