வறுமையிலும் சாதனை படைத்த வவுனியா மாணவன்

வறுமையை காரணமாக வைத்து கல்வியை விடாது கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள வவுனியாவில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற  இராமகிருஸ்ணன் துலக்சன் என்ற மாணவன், பொறியியலாளராகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் உதவுவதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார்.

நான்கு சகோதரர்களுடன் 6 பேரை கொண்ட குடும்பத்தில் மூத்தவரான இ.துலக்சன் வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுள்ளார். இம் மாணவன் வவுனியாவின் பின்தங்கிய கிராமமான சாம்பல் தோட்டம் கிராமத்தில் இருந்து சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர் கொழும்பு மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில்  வசித்து, மீண்டும் வவுனியாவிற்கு திரும்பி வந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

விவசாயம் மற்றும் கூலித்தொழிலை செய்து வரும் தந்தை, வீட்டுப்பணியாளரான தாய் என வறுமையின் மத்தியில் இம்மாணவன் பெற்றுக்கொண்ட பெறுபேறு வவுனியா மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பு என கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.

இந்த பெறுபேறு தொடர்பாக மாணவனான் இ.துலக்கசன் கருத்து தெரிவிக்கையில், “முதலில் இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கும் நான் எனது கல்வி நடவடிக்கையின் போது எவ்வித கஷ்டத்தினையும் வெளிப்படுத்தாது எனது கல்விக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் எனது பாடசாலை அதிபர் க. சிவநாதன் மற்றும் ஆசிரியர்களான திருமதி கனி அன்டனிகா, கணேசதாஸ், மகேந்திரன், ரூபதாசன், சிவாகரன், திருமதி தர்சிகா, கமலசிங்கம் உட்பட பரந்தாமன், இந்திரலிங்கம் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *